விளம்பரங்களை தடுக்கும் புதிய பிரவுசர் !!


Image result for brave browser

இணைய உலகில் மீண்டும் பிரவுசர் யுத்தம் உருவாக எந்த அளவு வாய்ப்பிருக்கிறது என்று தெரியவில்லை. இணையத்தில் 'நெட்ஸ்கேப்' கோலோச்சிய காலத்தில் 'மைக்ரோசாஃப்ட் எக்ஸ்புளோர'ரை அறிமுகம் செய்ததால் பெரும் போட்டி ஏற்பட்ட நிலையில் இருந்து இணைய‌ உலகம் வெகுவாக மாறிவிட்டது. பிரவுசர்களும் வெகுவாக முன்னேறிவிட்டன.
ஒற்றை பிரவுசர் ஆதிக்கம் செலுத்தும் சூழல் இப்போது இல்லை. இணையவாசிகள் தங்கள் தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் கூட, பிரவுசர்களின் போக்கை மாற்றி அமைக்கக்கூடிய கருத்தாக்கம் கொண்ட புதிய பிரவுசர்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன.

அந்த வகையில் புதிதாக ‘பிரேவ்' எனும் பெயரில் பிரவுசர் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான 'விவால்டி' புதிய பிரவுசரை விட, பிரேவ் பிரவுசர் அறிமுகமாகும் போதே அதிக கவனத்தையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறன.

முதல் காரணம், பிரேவ் பிரவுசரின் பின்னே உள்ள நிறுவனர். இரண்டாவது காரணம் அதன் பின்னணியில் உள்ள கோட்பாடு.
பிரேவ் பிரவுசரை உருவாக்கியுள்ளவர் பிரெண்டன் ஈச். இவர் வேறு யாருமில்லை. இணைய உலகின் பிரபலமான பிரவுசராக இருக்கும் 'ஃபயர்ஃபாக்சி'ன் பின்னணியில் உள்ள 'மொசில்லா' அமைப்பின் இணை நிறுவனர். அது மட்டும் அல்ல பிரவுசர் செயல்பாடுகளுக்கு முக்கியமாக அமையும் 'ஜாவா ஸ்கிரிப்ட்'டை உருவாக்கியவர். எதிர்பாராத சர்ச்சை காரணமாக மொசில்லா அமைப்பில் இருந்து விலக நேர்ந்த ஈச், இப்போது பிரேவ் சாஃப்ட்வேர் எனும் நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் அதே பெயரில் புதிய பிரவுசரை அறிமுகம் செய்துள்ளார்.

ஏற்கெனவே உள்ள 'குரோமியம்' பிரவுசர் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, இணையம் மற்றும் மொபைலில் செயல்படக்கூடிய இந்த பிரவுசர், விளம்பரங்களைத் தடுக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆதார பலமாக முன்வைக்கப்படுகிறது. இதன் காரணமாக இணையவாசிகள் விளம்பர ஊடுருவலின்றி இணையத்தில் உலாவலாம் என்பது மட்டும் அல்ல, இதுவே பிரவுசரின் செயல்பாட்டை மேலும் விரைவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது. விளம்பரங்கள் மட்டும் அல்ல இணையவாசிகள் செயல்பாடுகளைப் பின் தொடரும் 'குக்கி' சாஃப்ட்வேர் பொறிகளையும் நீக்குகிறது.

விளம்பரங்கள் நீக்கப்படுவதால் இணையதளங்கள் வழக்கமான பிரவுசர்களில் தோன்றுவதை விட 60 சதவீதம் விரைவாகத் தோன்ற வாய்ப்பிருப்பதாக ஈச் தெரிவித்திருக்கிறார்.

பிரவுசர் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் புதுமை இல்லை என்றாலும் கூட, விளம்பரத்தைத் தடுக்கும் தன்மையே இதன் முக்கிய பலமாக அமைந்துள்ளது. இணைய உலகில் விளம்பரங்களைத் தடுக்கும் மென்பொருட்கள் இப்போது பிரபலமாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இவை 'ஆட் பிளாக்கர்ஸ்' என்று குறிப்பிடப்படுகின்றன. இவை இணையவாசிகளுக்கு விளம்பரங்களிலிருந்து விடுதலை அளித்தாலும், இணையதள நிறுவனங்களுக்கான வருவாயை அடைக்கும் வழியாக அமைவதால் சர்ச்சைக்கும் இலக்காகி இருக்கின்றன.
இந்தப் பின்னணியில் விளம்பரங்களைத் தடுப்பதை மட்டுமே முக்கியக் கருத்தாக்கமாக பிரேவ் பிரவுசர் கொண்டுள்ளது. பிரேவ் பிரவுசர் விளம்பரங்களைத் தடுப்பதுடன் நிற்கப்போவதில்லை. நீக்கப்படும் விளம்பரங்களைத் தனது சொந்த பதில் விளம்பரங்களால் பதிலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

Image result for brave browser

விளம்பரங்களுக்குப் பதில் வேறு விளம்பரங்களா? அது என்ன நியாயம் என்று கேட்கலாம். பிரேவ் தரப்பில் இதற்கான நியாயம் முன்வைக்கப்படுகிறது. வழக்கமான விளம்பரங்கள் போல இந்த விளம்பரங்கள் ஊடுருவும் தன்மை கொண்டிருக்காது மற்றும் இணையவாசிகளைப் பின் தொடரும் தன்மை கொண்டிருக்காது எனும் விளக்கம்தான் அந்த நியாயம்!

அதாவது பொதுவாகச் செய்யப்படுவது போல இணையவாசிகள் பற்றிய தனிப்பட்ட விவரங்கள் எதையும் சேகரிக்காத வகையில் புதிய விளம்பரங்கள் அமைந்திருக்கும். மாறாக இணையவாசிகளின் பயன்பாட்டுத் தன்மை அடிப்படையில் பொருத்தமான விளம்பரங்கள் தோன்றுமாறு செய்யப்படும். பிரவுசர் செயல்பாட்டை மெதுவாக்கும் மற்றும் இணையவாசிகளின் அந்தரங்கத்தை ஊடுருவும் விளம்பரங்களுக்கு விடை கொடுத்து விட்டு, அதே நேரத்தில் புதிய விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை இணையதளங்களுடன் மற்றும் இணையவாசிகளுடன் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆம், இணையவாசிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப அவர்களுக்கும் ஏதேனும் ஒரு வித‌த்தில் பலன் அளிக்கப்படும். இதற்கு முதல் கட்டமாக குறிப்பிட்ட அளவு பயனாளிகளைச் சென்றடையவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விளம்பரத் தடுப்புச் சேவைகளில் வருவாய் இழப்பே பெரிய குறையாக இருக்கும் நிலையில், மாற்று விளம்பரங்கள் மற்றும் அனைத்துத் தரப்பினருடன் வருவாய்ப் பகிர்வு ஆகிய அம்சங்களைக் கொண்டிருப்பதால்தான் பிரேவ் பிரவுசர் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது. மேலும் 'என்கிரிப்ஷன்' சார்ந்த செயல்பாடும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் இது மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

இவையே பிரவுசர் உலகில் புதிய போக்காக பிரேவ் அமையுமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நிற்க, ஃபேஸ்புக் தரப்பிலும் அதன் செயலிக்கான புதிய பிரவுசர் ஒன்று சோதனை முறையில் உருவாக்கப்பட்டு வருவதாகச் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட சில பயனாளிகள் மத்தியில் பரிசோதித்துப் பார்க்கப்படும் இந்த பிரவுசர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து பயனாளிகள் வெளியேறாமலேயே இணையத்தில் உலாவ வழி செய்யும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பயனாளிகள் இணையத்தைப் பயன்படுத்தினாலும் தன்னை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் விரும்புவதை இது காட்டுகிறது. இந்த பிரவுசர் பொதுப் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்பிருக்கிறதா? அப்படியே வந்தாலும் வெற்றி பெறுமா? வெற்றி பெற்றால் என்ன நிகழும் என்பன‌ போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

விஷயம் என்னவென்றால் ஏதோ ஒரு வகையில் இணைய உலகில் மீண்டும் பிரவுசர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதுதான். 'விர்ச்சுவல் ரியாலிட்டி' எனப்படும் மெய்நிகர்த் தன்மை அடுத்த பெரிய தொழில்நுட்பமாக அமையும் என்று கூறப்படும் நிலையில் மெய்நிகர்த் தன்மை கொண்ட பிரவுசர் ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதையும் நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும்.

http://www.brave.com/




Comments

Popular posts from this blog

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials

Encrypted smartphones secure your identity, not just your data

அலர வைக்கும் அலாரம்