ஆண்ட்ராய்டு கஸ்டம் இயங்குதளங்கள்!
வெளியில் தெரியுறது ஒரு ரூபம் ஆனா உள்ள இருக்குறது பல ரூபங்கள்..." இந்த டயலாக் யாருக்கு பொருந்துமோ இல்லையோ ஆண்ட்ராய்டுக்கு அப்படியே பொருந்தும். ஆண்ட்ராய்டு நொளகட் இயங்குதளம் என்றால் அதைப் பயன்படுத்தும் எல்லா ஸ்மார்ட்போன்கள்லயும் ஒரே மாதிரி ஆப்ஷன்தானே இருக்கவேண்டும்? ஆனால் அப்படி இருக்காது. அதை மொபைல் நிறுவனங்கள் அவர்களுக்கு தகுந்தவாறு மாற்றியமைத்து பயன்படுத்துகின்றன. அதற்கு பெயர் கஸ்டம் ஓஎஸ்கள். அதாவது மாற்றியமைக்கப்பட்ட இயங்குதளங்கள்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் மிகப்பெரிய பலமே அது ஓப்பன் சோர்ஸ் என்பதால் அதை எளிதில் மாற்றியமைக்க முடியும் என்பதுதான். எனவே இது போன்ற இயங்குதளங்கள் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களை விட அதிக வசதிகளை கொண்டிருக்கின்றன.
கஸ்டமைஸ்டு ஓஎஸ்களின் சிறப்புகள்.
தற்போது பிரபலமாக இருக்கும் பெரும்பாலான Custom OS கள் ஆப்பிளின் iOS இயங்குதளத்தை போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தாலும் iOS ஐ விட வசதிகள் அதிகமாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக iOS மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களின் தோற்ற அமைப்பு ஒரே மாதிரியாக இருக்கும். தோற்றத்தை மாற்ற வேண்டுமென்றால் வேறொரு ஆப்பை இன்ஸ்டால் செய்து அதன் மூலமாகவே மாற்ற முடியும். ஆனால் கஸ்டமைஸ்டு ஓஎஸ்களில் அதை எளிதாக மாற்றலாம்.
ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை விடவும் கவர்ச்சியான வடிவமைப்பு,Theme,Wallpaper உபயோகப்படுத்தும் வசதி,Virus scanner, Memory cleaner என அனைத்து வசதிகளும் இன்பில்டாகவே கிடைக்கும். பெரும்பாலான இயங்குதளங்களில் மொபைல் முழுவதையும் சிங்க் செய்து கொள்ளும் வசதி இருப்பதால் வேறு ஒரு மொபைலில் லாகின் செய்து தகவல்களை எளிதாக மாற்றிகொள்ளலாம். ஸ்டாக் ஆண்ட்ராய்டு போல இல்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் குறைகளை சரி செய்வதற்கும் அப்டேட்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
பிரபலமான கஸ்டமைஸ்டு இயங்குதளங்கள்
CyanogenMod
ஆண்ட்ராய்டை பொறுத்தவரை CyanogenMod இயங்குதளத்தை கஸ்டமைஸ்டு ஓஎஸ்கள் முன்னோடி என கூறலாம். 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இது மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. ஸ்டாக் ஆண்ட்ராய்டை விட அதிகமான வசதிகள் இருந்ததால் OnePlus,YU, ZUK போன்ற நிறுவங்கள் தங்களது ஆரம்பகட்ட ஸ்மார்ட்போன்களில் CyanogenMod ஐ பயன்படுத்தியது. அப்டேட்கள் உடனே கிடைப்பதும் ஒரு ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வெளியானால் உடனே டெவலப் செய்யப்பட்டு கிடைப்பதும் இதன் மிகப்பெரிய பலம். ஆனால் சில காரணங்களால் 2016 ம் ஆண்டு இதன் வெளியீடு நிறுத்திக்கொள்ளப்பட்டது.
MIUI
ஜியோமி நிறுவனம் தனது மொபைல்களில் இந்த இயங்குதளத்தை பயன்படுத்துகிறது. 2010 ல் அறிமுகப்படுத்தபட்ட இதை தற்பொழுது உலகம் முழுதும் 170 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். டூயல் ஆப்ஸ், scrolling screenshot, சிறப்பான போட்டோ மற்றும் வீடியோ எடிட்டிங் என வசதிகள் இதில் அதிகம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட்கள் கிடைப்பது இதன் பிளஸ் பாயிண்ட். Multi-window, screen record என அடுத்த அப்டடேட்டுக்குத் தயாராக இருக்கிறது MIUI9
OxygenOS
ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் இது பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு போலவே இருக்கும் இதில் ஒரு சில வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மெமரியை குறைவாகவே பயன்படுத்துவதால் வேகமாக செயல்படும்.
Vibe UI
லெனோவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளம் Vibe UI. வசதிகள் அதிகம் இருந்தாலும் அதிக மெமரியில் அதிக இடத்தை பயன்படுத்துகிறது என்பதால் இனிமேல் தனது மொபைல்களில் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறது லெனோவோ.
Comments
Post a Comment