அறிமுகமில்லாதவருக்கு மின்னஞ்சல் அனுப்பலாமா?

Image result for maIL



இமெயில் உலகில் ஸ்பேம் மெயில்கள் பிரசித்தமானவை. அழையா விருந்தாளிகளான இந்த வகை விளம்பர மெயில்களை நீங்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கலாம். சில நேரங்களில் இத்தகைய குப்பை மெயில்கள் பயங்கர கோபத்தைத் தந்துவிடும்.

ஸ்பேம் மெயில்கள் போலவே இன்னொரு வகையான மெயில்கள் இருக்கின்றன. இந்த வகை மெயில்களையும், அவற்றை அனுப்பிவைக்கும் நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருப்பது, வேலை வாய்ப்பு தேடல் முதல் வலைப்பின்னலுக்கான வலை வீச்சு வரை பலவிதங்களில் உதவியாக இருக்கும்.

அதென்ன இமெயில் வகை என்று கேட்கிறீர்களா? கோல்ட் இமெயில்கள் தான் அவை. தமிழில் குளிர் இமெயில் எனப் பொருள் கொள்ள முடியாது. இதமில்லா இமெயில் என வைத்துக்கொள்ளலாம்.
இதமில்லா இமெயில்களை அனுப்பிவைப்பதற்கான அவசியம் இருக்கிறது. சரியான முறையில் அனுப்பிவைத்தால் இவற்றுக்கு நல்ல பலனும் கிடைக்கும்!

பொதுவாகத் தெரிந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும்தான் இமெயில் அனுப்புவது வழக்கம். அல்லது அலுவல் நோக்கில் வந்துள்ள மெயில்களுக்கு பதில் அனுப்பி வைப்போம். இவ்வாறு இல்லாமல் முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்கு அவர் நம்மிடமிருந்து மெயில் வரக்கூடும் என்று எதிர்பார்க்காத நிலையில், இமெயில் அனுப்பிவைப்பதைத்தான் ஆங்கிலத்தில் கோல்ட் இமெயில் என்கிறார்கள்.

அனுமதி இல்லாமல் அனுப்பிவைக்கப்பட்டாலும், இந்த வகை இமெயில்கள் அழையா விருந்தாளிகளாகக் கருதப்படும் ஸ்பேம் மெயில்களில் இருந்து வேறுபட்டவை. ஏனெனில், இவை விளம்பர நோக்கில் அனுப்பிவைக்கப்படுபவை அல்ல. அதைவிட முக்கியமாக, ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்பிவைப்போம், யாராவது ஒரு சிலர் பார்த்தாலும் லாபமே என்ற மலிவான மார்கெட்டிங் உத்தி போல இல்லாமல், இவை குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படுபவை என்பதோடு, அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்ப்பவை. எனவே, தேவையான நேரங்களில் இந்த உத்தியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான நுழைவு தேவை எனில் அங்குள்ள உயர் அதிகாரி ஒருவருக்கு இமெயில் அனுப்பிவைக்கலாம். புதிய முயற்சிக்கான ஆதரவு தேவை எனில், முன்பின் தெரியாத பெரிய மனிதரிடம் இமெயிலில் உதவி கோரலாம். இயக்குநராகும் கனவில் இருப்பவர்கள் பிரபல தயாரிப்பாளருக்குக் குறும்பட இணைப்புடன் வாய்ப்பு கேட்கும் இமெயில் அனுப்பலாம்.

இது இமெயில் உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உத்தியாகவே இருக்கிறது. கூகுளில் கோல்ட் இமெயில் எனும் பதத்தைத் தேடிப்பார்த்தால், சிறந்த முறையில் கோல்ட் மெயில் அனுப்புவது எப்படி என வழிகாட்டும் கட்டுரைகள் அணிவகுக்கும். இது இமெயில் கலையில் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய கலை.

இந்த நுணுக்கங்களை விளக்கும் பல்வேறு கட்டுரைகளில் பொதுவாகக் காணப்படும் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்:

தலைப்பு முக்கியம்
நீங்கள் யார் என்பது தெரியாததால் உங்கள் மெயிலை பார்த்ததுமே அதை அலட்சியம் செய்ய அல்லது டெலிட் செய்யத் தோன்றலாம். அதற்குள் நீங்கள் கவனத்தை ஈர்த்தாக வேண்டும். இமெயிலுக்கான தலைப்பு மூலம் அதைச் செய்ய வேண்டும். மெயிலின் நோக்கம், உள்ளடக்கம் ஆகியவற்றைத் தலைப்பு கச்சிதமாகத் தெரிவிக்க வேண்டும். கொஞ்சம் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தாலும் நல்லது. ஆனால் மிகை வார்த்தைகளோ, அலங்காரமோ தேவையில்லை. இத்தகைய தலைப்புக்குக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

நீங்கள் யார்?
 
தலைப்பு மூலம் கவனத்தை ஈர்த்த சில நொடிகளில் நீங்கள் யார் என்பதைத் தெரிவித்துவிட வேண்டும். அதற்கான அறிமுகம் இமெயிலில் இருக்க வேண்டும். மெயில் பெறுபவருக்கு நீங்கள் அறிமுகம் இல்லாத நபர் என்பதால் இது மிகவும் முக்கியம். அதோடு உங்களைப் பற்றிய அறிமுகம் ஒரு நம்பகத்தன்மையைக் கொடுக்கும். இதைச் செய்யச் சிறந்த வழி, இருவருக்கும் பொதுவாக அறிமுகமான ஒருவரைச் சுட்டிக்காட்டலாம். அப்படி யாரும் இல்லாவிட்டால், மெயில் அனுப்பும் நபர் பற்றி நன்றாக ஆய்வுசெய்து அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொண்டு அவருக்கு ஏற்ற வகையில் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.

சிக்கனம் முக்கியம்
 
இனி உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெரிவிக்க வேண்டும். சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும். இரண்டு, மூன்று பத்திகளில் விஷயத்தை முடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அதற்கு மேல் நீளும் மெயில்கள் அநேகமாகப் படிக்கப்படும் வாய்ப்பில்லை. தவிர அவரது நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்வதும் முறையல்ல.

நெத்தியடி கோரிக்கை
 
சுருக்கமான வார்த்தைகளில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கை எளிமையானதாக, மறுக்கப்பட முடியாததாக இருந்தால் இன்னும் சிறப்பு. உதாரணத்துக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா எனக் கேட்பதைவிட, உங்கள் நிறுவன கலாச்சாரம் பற்றி அறிய பத்து நிமிடம் உங்களைச் சந்தித்துப் பேச இயலுமா எனக் கேட்கலாம்.

கொஞ்சம் புகழுங்கள்
 
கேட்டது கிடைக்கும் என்றால் நீங்கள் ஏதாவது கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் உங்களிடம் இருக்கிறதா எனப் பார்த்து அதைக் குறிப்பிடவும். எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரைப் பற்றிப் புகழ்ச்சியாக நான்கு வார்த்தைகள் கூறுங்கள். ஆனால், இவை வெறும் புகழ்ச்சியாக இல்லாமல், இயல்பானதாக, அவரைப் பற்றிய சரியான புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

தனிப்பட்ட தன்மை
 
நீங்கள் தொடர்பு கொள்ளும் நபரை பற்றி இயன்ற அளவு ஆய்வு செய்து அவருக்கு ஏற்ற வகையில் தனிப்பட்ட முறையில் உங்கள் கோரிக்கையை வைக்கவும்.

எப்போதேனும் தேவை ஏற்பட்டால் இப்படி ஒரு மெயிலை அனுப்பிப் பாருங்கள். ஒரு சிறு குறிப்பு; இணையத்தில் தேடினால், சிறந்த கோல்ட் இமெயில்களை அனுப்புவதற்கான குறிப்புகள் மட்டும் அல்ல, இதற்கான இமெயில் வடிவங்களேகூடக் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், ஒரு போதும் அவற்றைப் பயன்படுத்த முயல வேண்டாம். ஏனெனில் இந்த வகை மெயிலின் பலமே, பெறுபவருக்கு ஏற்ற வகையில் அதை நீங்கள் தனிப்பட்ட தன்மையோடு அனுப்புவதில்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

தமிழில் விரலால் எழுதியும் இனி மெசேஜ் அனுப்பலாம்: கூகுள் புதிய வசதி !

ஏர் மவுஸ் !!

“Fakeapp” Android Malware Steals Facebook Credentials